டாஸ்மாக் கடைகளை மூட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ?

Breaking News

header ads

டாஸ்மாக் கடைகளை மூட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக 3வது முறையாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்து இருந்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்தும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டதாகவும், ஒரு சில இடங்களில் விதி மீறல்கள் நடந்ததை வைத்து, ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மனு இன்று அல்லது நாளைமறுநாள் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments